![]() |
| திருமங்கை மன்னன், குமுதவல்லி நாச்சியார்- திருநகரி |
திருக்குறுங்குடியில் சுதா மாமி ஸ்ரீனிவாசன் மாமா வசித்தபோது அங்கு ஒரு வாரம் தங்கியிருந்தேன். காலையில் எழுந்தவுடன் குளித்து நம்பி கோவிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். திரும்பி வந்தவுடன் சாப்பிட்டு மாமாவுடைய காரில் அருகிலிருக்கும் திருவட்டாறு தென்காசி மணிமுத்தாறு அணை நாங்குநேரி பேச்சிப்பாறை அணை என்று ஊர்சுற்றி வருவோம். திருக்குறுங்குடி மலைகள் சூழ்ந்த ஊர். காற்று மலைகளில் அறைந்து வந்து மோதும். மலை தன் இரு உள்ளங்கைகளில் நீரை ஏந்தியிருப்பது போன்ற பெரும் ஏரி மலைக்குக் கீழ் இருக்கும். ஊர்சுற்றாத நாட்களில் திருக்குறுங்குடிக்கு வெளியில் மாலை நடை செல்வோம். வயல்கள் நிறைந்த மலையடிவாரம். நெல்லும் சோளமும் பயிரிட்டு இருந்தார்கள். வயல்களுக்கு நடுவில் ஒரு சன்னிதியிருந்தது. அருகில் சென்று பார்த்த போது அது திருமங்கை ஆழ்வாரின் திருவரசு(சமாதி) என்று தெரிந்தது. ஆழ்வார் திருக்குறுங்குடிக்கு வந்து மோட்சம் அடைந்தார் என்று கேட்டிருக்கிறேன். ஆனால் அவருடைய திருவரசு இங்குத் தனியாக ஒரு மூலையில் இருப்பது தெரியவில்லை.
ஆழ்வார் திரு ஆலி என்னும் குறுநாட்டின் அரசன். இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை தன் குதிரையில் சென்று பாசுரம் பாடி வந்தவர். ஆழ்வார்களில் நம்மாழ்வாருக்குப் பின் எண்ணிக்கையில் அதிகப் பாசுரங்கள் இயற்றியவர். தன் பிரபந்தங்களில் பல்வேறு யாப்பு வகைகளைப் பயன்படுத்தியவர். இன்னும் நல்ல இடமாகப் பார்த்து ஓய்வு எடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. ஆனால் ஒரு கவிஞராகத் தன்னத்தனிமையில் மலைகள் சூழ்ந்து வயல்களுக்கு நடுவில் தன்னை அமைத்துக்கொண்டது மிகவும் பொருத்தமானதாகத் தெரிந்தது.
ஆழ்வார் அவதரித்த ஊர் திருநகரி. கார்த்திகையில் கார்த்திகை நாள் அவருடையது. பெருவிழாவாகக் கொண்டாடப்படும். நான் பாடசாலையிலிருந்து வெளிவந்த உடன் கொஞ்சக் காலம் திவ்ய தேச கோவிலுக்குச் சென்று கைங்கர்யம் என்று சொல்லப்படும் கோவில் சேவை செய்துகொண்டிருந்தேன். கைங்கர்யம் வைணவர்களுடைய கடமைகளில் ஒன்று. பெரும்பாலான பெருமாள் கோவில்கள் செயல்படுவதே அதனால் தான். மடப்பள்ளியில் பரிசாரகராக இருப்பது, காய்கறி நறுக்குவது கிணற்றிலிருந்து தீர்த்தம் கோருவது. வேத பிரபந்த பாராயணம். பெருமாள் வஸ்திரங்களைத் துவைத்துக் காய வைத்து மடித்துவைப்பது. தோளுக்கினியான், பல்லக்குக்கு தோள் போடுவது. தீவட்டி ஆலவட்டம் பிடிப்பது போன்ற கோவிலுக்குத் தேவைகள் எண்ணற்று இருக்கும் . நான் நண்பர்களுடன் திருப்பாவாடை உற்சவம் என்னும் அன்னக்கூடை உற்சவத்திற்குச் சென்றிருந்தேன். மூன்று பேர் உள்ளே அமரும் பத்து பெரும் அண்டாக்களில் புளிக்காய்ச்சலும் அன்னமும் புளியோதரைக்காகத் தயாராகிக்கொண்டிருந்தது. அருகில் உள்ள கிராமங்களிலிருந்தெல்லாம் மக்கள் வந்து கைநிறைய பிரசாதம் வாங்கிச் சென்று அண்டாக்கள் சுத்தமான பின் தான் எதற்கு இத்தனை பிரசாதம் தயாரித்தார்கள் என்ற கேள்வி எனக்கு இல்லாமல் ஆகியது.
அவ்விழாவில் திருமங்கை ஆழ்வார் உற்சவருக்குத் திருமஞ்சனம் நடைபெறும். அப்போது ஆழ்வாருடைய அழகிய மேனியை அண்மையில் காண முடிந்தது. ஆழ்வார்களிலேயே அழகியவர் ஆலிநாடன் தான். வில்லிபுத்தூர் ஆண்டாளை விட அழகர். மெல்லிய உறுதியான மேனி. அரசன் என்ற நிமிர்வும் பெருமாள் முன் அடியார் என்ற பணிவும் ஒருங்கே அமைந்திருக்கும். நிச்சயம் தமிழ் நாட்டில் உள்ள முதல் பத்து அழகிய செப்புத் திருமேனிகளில் ஒன்று. மணவாள மாமுனிகள் திருநகரியில் தங்கியிருந்தபோது அதன் அழகை வியந்து பாடி 'சூர்ணிகை' என்னும் வசனயாப்பு வகையில் இயற்றப்பட்டது. திருமஞ்சனக் காலத்தில் ‘கட்டியம்’ பாடி வணங்கும் வகையில் இயற்றியிருக்கலாம்.
ஓம் என்ற வாயும் உயர்ந்த மூக்கும் குளிர்ந்த முகமும்
பரந்த விழியும் பதிந்த நெற்றியும் நெறித்த புருவமும்
சுருண்ட குழலும் வடிந்த காதும் அசைந்த காதுகாப்பும்
தாழ்ந்த செவியும் சரிந்த கழுத்தும் அகன்ற மார்பும்
திரண்ட தோளும் நெளித்த முதுகும் குவிந்த இடையும்
அல்லிக் கயிறும் அழுந்திய சீராவும் தூக்கிய கரும் கோவையும்
தொங்கலும் தனிமாலையும் தளிரும் மிளிருமாய் நிற்கிற நிலையம்
சாற்றிய திருத் தண்டையும் சதிரான வீரக் கழலும்
தஞ்சமான தாளிணையும் குந்தியிட்ட கணைக் காலும்
குளிர வைத்த திருவடி மலரும் வாய்த்த மணம் கொல்லையும்
வயலாலி மணவாளனும் வாடினேன் வாடி என்று
வாழ்வித்தருளிய நீலக் கலிகன்றி மருவலர்தம் உடல் துணிய
வாள் வீசும் பரகாலன் மங்கை மன்னனான வடிவே .
உறை கழித்த வாளையொத்த விழி மடந்தை மாதர் மேல்
உருக வைத்த மனம் ஒழித்து இவ்வுலகளந்த நம்பி மேல்
குறைய வைத்து மடல் எடுத்த குறையலாளி திருமணம்
கொல்லை தன்னில் வழி பறித்த குற்றமற்ற செங்கையான்
மறை உரைத்த மந்திரத்தை மாலுரைக்க அவன் முனே
மடியொடுக்கி மனமடக்கி வாய் புதைத்து ஒன்றலார்
கறை குளித்த வேல் அணைத்து நின்ற விந்த நிலைமை என்
கண்ணை விட்டகன்றிடாது கலியன் ஆணை ஆணையே.
தாது புனை தாளிணையும் தனிச் சிலம்பும்
நீதி புனை தென்னாலி நாடன் திருவழகைப் போல
என்னாணை ஒப்பார் இல்லையே
வேல் அணைத்த மார்பும் விளங்கு திருவெட்டு எழுத்தை
மாலுரைக்கத் தாழ்த்த வலச்செவியும்
தாளிணைத் தண்டையும் வீரக்கழலும் தார்க் கலியன் நன்முகமும்
கண்டு களிக்கும் என்கண்
இதுவோ திருவரசு இதுவோ திருமணம்கொல்லை
இதுவோ எழில் ஆழி என்னுமூர்
இதுவோ தான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டு எழுத்தும் பறித்த விடம்.

