1812ஆம் ஆண்டு ஜூன் மாதம் நெப்போலியன் ரஷ்யா மீது படையெடுத்தார். பிரேஷ்ய, ஆஸ்திரியா, பிரஞ்சு நாடுகளை சேர்ந்த ஆறு லட்சத்திற்கும் மேல் போர் வீரர்கள், ஐம்பதாயிரம் போர் குதிரைகள், ஆயிரத்திற்கும் மேல் பீரங்கிகள், குதிரை வண்டிகள் அடங்கிய ‘தி கிரேட் ஆர்மீ’ நெப்போலியன் தலைமையில் ஒன்று திரண்டது. ஐரோப்பிய வரலாற்றிலேயே மிகப்பெரிய படையெடுப்பாக இது கருதப்படுகிறது. தன்னுடைய படைகளை சில பிரிவுகளாக பிரித்து தேவையானபோது இணைத்து போர் செய்வது நெப்போலியனின் போர் உத்தி. அது வெற்றிகரமான போர் முறையாகவும் இருந்துள்ளது. ஆனால் அந்த போர்முறை ரஷ்யா மீது படையெடுக்கும் போது மிக மிக மோசமான விளைவாக மாறி பிரஞ்சு படையை அழித்தது.
ரஷ்யாவின் முதலாம் ஜார் மன்னர் நெப்போலியனுடன் செய்த உடன்படிக்கையை மீறி பிரிட்டிஷ் நாட்டுடன் வணிகம் செய்தது ரஷ்யா மீது நெப்போலியன் படையெடுக்கக் காரணமாக மாறியது. மிக விரைவாகப் பெரும் படையுடன் ரஷ்யாவைத் தாக்கி போரை வெல்வதே நெப்போலியனின் எண்ணம். மாறாக ரஷ்யா சில இடங்களில் போர் செய்தாலும் தன் படையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டே சென்றது. செல்லும் வழியில் உணவு உறைவிடங்கள் பாலங்களை தீ இட்டு அழித்து பிரஞ்சு படைக்கு உணவும் சரியான இடத்தில் தங்கும் வசதியும் இல்லாமல் செய்தது. மறுபக்கம் பிரஞ்சு படையின் பெரும் எண்ணிக்கையே அதன் பலவீனமாக மாறியது. ரஷ்யாவின் சாலைகள் மோசமாக இருந்ததால் குறுகிய ஒரே பாதையில் மொத்தப் படையும் சென்றது. அதனால் முதலில் சென்றவர்களுக்கு மட்டும் உணவு கிடைத்தது, பின்னால் வரும் வீரர்களுக்கும் குதிரைகளுக்கும் உணவு இல்லாமல் ஆகியது. அதனால் உணவு தேடி படைவீரர்கள் அலைய வேண்டிய சூழல் உருவாகியது. அது படையின் ஒழுக்கத்தைக் குலைத்தது. ஒழுக்கமின்மை ஏற்பட்டு சொந்தப் படைகளுக்குள்ளேயே அடிதடி தொடங்கியது. மோசமான உணவு அசுத்தமான தண்ணீர் சோர்வு ஆகியவை வீரர்களைப் பலவீனமடையச்செய்தது. அதனால் எளிதில் படையில் நோய்கள் பெருகியது. ஆறு லட்சம் படைவீரர்கள் கொண்ட தி கிரேட் ஆர்மீ ரஷ்யாவின் மாஸ்கோவைச் சென்றடைந்த போது வெறும் ஒரு லட்சமாகக் குறைந்திருந்தது. ரஷ்யர்கள் மாஸ்கோவையும் கைவிட்டுவிட்டு மேலும் பின் வாங்கி பீட்டர்ஸ்பர்க் சென்று விட்டனர். ஒரு மாதக் காலம் மாஸ்கோவில் நெப்போலியன் காத்திருந்தார் சமாதான தூது வரும் என்று நினைத்து. ஆனால் அதற்குப் பதிலாக ரஷ்யர்கள் மாஸ்கோவைத் தீவைத்து அழித்தனர். ரஷ்யாவின் கடும் குளிர் ஆரம்பித்திருந்தது, பிரஞ்சு வீரர்கள் சோர்ந்திருந்தனர். மேலும் பீட்டர்ஸ்பர்க் நோக்கிப் படையெடுக்க முடியாத சூழலில் வேறுவழியில்லாமல் நெப்போலியன் பிரான்ஸுக்கே திருப்ப வேண்டியிருந்தது. போரின் தொடக்கத்தில் வானிலை மிகவும் வெப்பமாக இருந்தது அதனால் மாஸ்கோ நோக்கிய அவர்களின் நடைப்பயணம் வறட்சியும் புழுதியும் நிறைந்ததாக அமைந்தது. பின்னர் பின்வாங்கும் பயணம் தொடங்கியபோது கடும் குளிர் நிலவியது. அது எலும்பையே ஊடுருவிச் செல்லும் வகையிலான உறைபனிக் குளிர். பிரான்ஸுக்கு மீண்ட போது வெறும் நாற்பதாயிரம் வீரர்கள் தான் மிஞ்சியிருந்தனர். அது நெப்போலியனின் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது.
இந்த போரை மையமாக வைத்துப் புனைவுகள் பல வந்திருக்கிறது. நாம் அனைவரும் அறிந்த டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ நாவல் இந்த போரின் பின்னணியில் அமைந்தது. இதே கதைக்களம் கொண்ட பின்னணியில் இரு கிராபிக் நாவல்களைச் சமீபத்தில் படித்தேன். லயன் காமிக்ஸ் வெளியீட்டில் வந்த ‘பனியில் ஒரு குருதிப்புனல்’ , ‘விதி எழுதிய வெள்ளை வரிகள்.
பனியில் ஒரு குருதிப்புனல் இத்தாலிய மொழியில் வெளிவந்து பிரபலமான கிராபிக் நாவல். டிட்டோ ஃபராசி (Tito Faraci) அதன் எழுத்தாளர், பாஸ்குவாலே ஃப்ரிசெண்டா(Pasquale Frisenda) இந்த நாவலின் சித்திரங்களை வரைந்தவர். பிரஞ்சு படைகளிலிருந்து பிரிந்து செல்லும் சில போர்வீரர்கள் ஒரு மாந்திரீக கிராமத்தில் சிக்கிக்கொள்வது கதைக்களம். கருப்பு வெள்ளையில் உள்ள நாவலில் நெருப்புக்கும் குருதிக்கும் சிவப்பு வண்ணம் கொடுத்து வரைந்திருக்கிறார் ஓவியர். முகத்தில் தெரியும் அச்சம், பயங்கரம், மரண பீதி இதுவே நாவலின் மையம். அது நாவலில் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது.
இரண்டாவது கிராபிக் நாவல் ‘விதி எழுதிய வெள்ளை வரிகள்’. இதன் எழுத்தாளர்கள் ரெஜிஸ் பெனெட் மற்றும் ஆன்-லோர் ரெபௌல் (Régis Penet- Anne-Laure Reboul ) சித்திரங்கள் ரெஜிஸ் பெனெட். இது பிரஞ்சு மொழியில் வெளிவந்தது. மாஸ்கோவில் வாழும் பிரஞ்சு உயர்குடிகள் பிரஞ்சு படையெடுப்பால் மாஸ்கோவை விட்டு பிரஞ்சு தேசத்துக்கே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எலும்பை உருக்கும் கடும் குளிரில் வழிதவறி உணவும் தங்க இருப்பிடமும் இல்லாமல் ஒவ்வொருவராக இறந்து போகிறார்கள். மரணத்தின் முன் மனிதாபிமானமும் அன்பும் என்னவாக மாறுகிறது? என்று பார்க்கும் ஒரு நாவலாக எடுத்துக்கொள்ளலாம். பனியில் ஒரு குருதிப்புனல் நாவலிலும் மரணம் தான் மையம் ஆனால் அதை எதிர் கொள்வது போர் வீரர்கள் அவர்கள் அதற்காகவே போருக்கு வந்திருக்கிறார்கள். இந்த நாவலில் உள்ள அனைவரும் சாதாரணமான மனிதர்கள் கஷ்டங்களை அனுபவித்து அறியாத உயர்குடிகள். இவர்கள் யாராலும் கொல்லப்படுவதில்லை. குளிரில் உறைந்து பசித்து இறக்கிறார்கள்.
இந்த இரண்டில் ‘பனியில் ஒரு குருதிப்புனல்’ சாகசம் நிறைந்த கிராபிக் நாவலாக மட்டும் நின்றுவிடுகிறது. ‘விதி எழுதிய வெள்ளை வரிகள், மரணத்தின் முன் மனித பண்புகள் மெல்லத் திரிபு அடைவதையும், போரின் பொருளின்மையும், அதை தனி மனிதர்கள் எதிர்கொள்ளமுடியாமல் திகைத்து நிற்பதையும் அவர்களின் கையறுநிலையையும் கோட்டுச்சித்திரமாக வரைய முடிந்துள்ளதால் நல்ல இலக்கியத் தரமான கிராபிக் நாவலாக மாறுகிறது.
விதி எழுதிய வெள்ளை வரிகள்- கிராபிக் நாவல் வாங்க
பனியில் ஒரு குருதிப்புனல்- கிராபிக் நாவல் வாங்க

