காஞ்சி மாநகர்

சொன்ன வண்ணம் செய்த பெருமாள்- திருவெஃகா


காஞ்சிபுரம் என்னுடைய பூர்வீக ஊர். என்னுடைய முன்னோர்கள் காஞ்சியிலும் மகாபலிபுரத்திலும் வாழ்ந்துள்ளனர். காஞ்சி திருவெஃகா (யதோக்தகாரி பெருமாள்) கோவிலில் எங்களுக்கு பல கைங்கர்ய முறைகள் இருந்துள்ளன. அப்பாவுடைய அப்பா கடைசியாக பெருமாளின் திருவாபரணங்களை பாதுகாத்து உற்சவ காலங்களில் அலங்காரத்திற்கான  ஆபரணங்களை எடுத்தளிக்கும் பொறுப்பில் இருந்துள்ளார்.  மகாபலிபுரம் ஸ்தலசயன பெருமாள் திருக்கோவிலில் இப்போதும் தீர்த்த முறையும் முதல் மரியாதையும் எங்கள் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். திருவெஃகா காஞ்சிக்கோவில்களிலேயே பழமையானது. பெரும்பாணாற்றுப்படை ‘பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்’ என்று கூறுகிறது. இப்பெருமாளுக்கு தமிழில் அழகிய பெயர் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்று. (சம்ஸ்கிருதத்தில் யதோக்தகாரி) இந்த பெயருக்கான கதையை கேட்டிருக்கலாம். சிறுவயதிலிருந்து பல உபந்யாசங்களில் பலமுறை  கேட்ட கதை.

திருமழிசை ஆழ்வார் திருவெஃகாவில் இருந்த போது அங்கு ஒரு வயதான தாசி ஆழ்வாரின் ஆசிரமத்தை சுத்தம் செய்து வந்தார்.  அவளுக்கு ஆழ்வார் என்றும் இளமையாக இருக்கும்படி வரம் நல்கினார். காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னன் அப்பெண்ணின் அழகில் மயங்கி அவளை மணந்து கொண்டான்.  காலம் செல்லச் செல்ல மன்னன் இளமை குன்றி முதுமை பெறத்துவங்கினான்.  ஆனால் தன் மனைவி இளமை குன்றாமல் இருப்பதன் காரணத்தை அவளிடம் வினவினான்.  அவள் திருமழிசை ஆழ்வாரை பற்றி சொன்னாள். அரசன் ஆழ்வாரின் சீடனான கணிகண்ணனிடம் தனக்கும் என்றும் மாறாத இளமை அருள ஆழ்வாரிடம் எடுத்துரைக்கும்படி வேண்டினான்.  ஆனால் அவ்வாறு ஆழ்வார் செய்யமாட்டார் என கணிகண்ணன் கூறிவிட்டார். தன்னைப்பற்றி ஒரு பாடலேனும் பாடுமாறு மன்னன் கணிகண்ணனுக்கு உத்தரவிட்டான்.  கணிகண்ணன் மறுக்கவே அவரை நாடு கடத்தும்படி மன்னன் உத்தரவிட்டான். இதையறிந்த ஆழ்வார் சீடனுடன் தானும் செல்ல முடிவெடுத்தார்.  கோவிலுக்குச் சென்று பெருமாளிடம்

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும் உன்தன்
பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்

கணிகண்ணன் செல்கின்றான், நானும் செல்கிறேன், கச்சியில் இருக்கும் பெருமானே, நீயும் இங்கு இருக்கவேண்டாம். அதிசேஷனாகிய உன்னுடைய பாயைச் சுருட்டிக்கொண்டு எங்களுடன் கிளம்பி வா எனப்பாடினார்.  பெருமானும் அதை ஏற்று தன் நாகப்படுக்கையை சுருட்டிக்கொண்டு ஆழ்வாரின் பின் சென்றார்.  பெருமாளைத் தொடர்ந்து திருமகளும் செல்ல, காஞ்சி நகரம் பொலிவிழந்தது. இதைக்கண்ட மன்னன் தன் தவறையுணர்ந்து ஆழ்வாரிடம் தன்னை மன்னித்தருளும்படியும் அவரை நாடு திரும்பவும் வேண்டினான். அதனை ஏற்ற திருமழிசை ஆழ்வார் நாடு திரும்பினார். அவருடனே வந்த பெருமாளை நோக்கி ஆழ்வார்

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயும் உன்தன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள்

கணிகண்ணன் திரும்புகிறான், நானும் திரும்புகிறேன், கச்சிப் பெருமானே, நீயும் அதிசேஷனாகிய உன்னுடைய பாயைச் விரித்து படுத்துக்கொள் எனக் கூறினார். உடனே பெருமாளும் தன் நாகப்பாயை விரித்து படுத்துக்கொண்டார். அவ்வாறு செய்கையில் அவசரத்தில் பெருமாள் வலமிருந்து இடமாக மாறிப் படுத்துக்கொண்டார். ஆழ்வார் சொன்னபடியெல்லாம் செய்ததால் அவர் “சொன்ன வண்ணம் செய்த பெருமாள்” என்றழைக்கப்படுகிறார்.


என்னுடைய பால்ய காலம் சின்ன காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மாட வீதியில் தான்  கழிந்தது. வரதராஜபெருமாள் வருடத்திற்கு ஒரு முறை சித்திரை ஹஸ்தம் நட்சத்திரத்தில் எழுந்தருளும் வடக்கு மாடவீதி அவதார உற்சவ பங்களாவில் தான் என்னுடைய பன்னிரண்டாம் வயது வரை  நாங்கள் குடியிருந்தோம். 

ஆனாலும் காஞ்சி பற்றிய நினைவேக்கங்கள் எதுவும் எனக்கு இருந்ததில்லை. அதற்கு இன்னும் வயதாக வேண்டுமோ?. தெரியவில்லை. கடந்த ஞாயிறு (15-3-26) தாமரைக்கண்ணனும் நானும் காஞ்சி வைகுண்டநாத பெருமாள் (பரமேஸ்வர விண்ணகரம்) கோவிலுக்குச் சென்றிருந்தோம். தாமரை தமிழகத்தின் முற்கால வைணவம் குறித்து எழுதுவதற்காக அக்கோவிலைக் காண வேண்டும் என்று  சொல்லிக்கொண்டிருந்தான்.  காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவில் தொண்மையான விஷ்ணு ஆலயங்களில் மிக முக்கியமானது. அங்கிருந்து திருப்பாடகம் என்கிற பாண்டவதூதர் ஆலயத்திற்கும் சென்றிருந்தோம். திருப்பாடகம், திருஊரகம் (உலகளந்த பெருமாள்) இரண்டு கோவில்களுமே அதன் பிரம்மாண்டமான  மூல விக்ரகத்திற்காக தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.

காஞ்சி இந்திய வரலாற்றில் முக்கியமான நகரமாக இருந்துள்ளது. இந்தியாவில் காசிக்கு இணையாகக் கல்விக்கும் வணிகத்திற்குமான நகரமாக  இருந்திருக்கிறது. தமிழகத்தின் பல்லவ, சோழப் பேரரசுகள் காஞ்சியை மையமாக வைத்து தொண்டைமண்டலத்தை ஆட்சி செய்திருக்கின்றனர். சீனாவிலிருந்து இந்தியாவிற்குப் பயணம் செய்த யுவான் சுவாங் ‘கான்-சிங்-பூ-லோ’ என்று காஞ்சியைப் பற்றிக் குறிப்பு எழுதியிருக்கிறார். வைகுண்ட பெருமாள் கோவில் செதுக்கு சிற்பத்தில் சீனர் போன்ற சிற்பத்தை யுவான் சுவாங் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் உறுதியான தரவு அல்ல அது. யுவான் சுவாங் பார்த்த காஞ்சி பௌத்தம் தமிழகத்தில் செழிப்பாக இருந்த காலகட்டம். அவர் இந்தியாவிற்குப் பயணித்ததே புத்த சமய நூல்களை மொழிபெயர்க்கத்தான் என்று சொல்லப்படுகிறது.    அவருடைய குறிப்பு படி நூறு புத்த மடாலயங்களும், பத்தாயிரம் புத்தத் துறவிகளும் ஐம்பதிற்கும் மேலான திகம்பர ஜைன கோவில்களும் காஞ்சியிலிருந்துள்ளது. 

இன்று காஞ்சி கோவில்கள் நிறைந்த சுற்றுலா நகரம். இந்த நூற்றாண்டில் இந்த ஊர் பொருந்துவதற்கு மிகவும் அவதிப்பட வேண்டியிருக்கிறது. இந்த ஊர்களை அமைக்கும் போது நமக்கு இருந்த பண்பாட்டுத்தளம் இன்று முற்றிலும் மாறி வேறு நிலையை அடைந்துள்ளதால் மக்களுக்கும் இந்தக் கோவில்களை வைத்துக்கொண்டு  என்ன செய்வது என்று தெரியவில்லை. கோவில்களைச் சுற்றி சாக்கடைகள் குப்பை மேடுகள் பொருந்தாத வியாபாரக்கடைகள். சந்துபொந்துகளாகிவிட்ட சாலையில் அற்புதமான பல்லவர் காலக் கற்றளிகள் இருக்கின்றன. ஒரு தேவாரப் பாடல் பெற்ற தலம் அதன் சுவடு இல்லாமல் முற்றிலும் சிமிண்ட் கட்டுமானமாக இருந்தது. 

காலை முழுவதும் வைகுண்ட பெருமாள் கோவிலிலும் பிற விஷ்ணு கோவில்களைச் சுற்றிவிட்டு மாலை திருப்பருத்திக்குன்றம் கோவிலுக்குச் சென்றோம். இன்று ஒதுக்குப்புறமாகிவிட்ட இடம். ஒரு காலத்தில் ஜைனர்களின் மையமாக இருந்திருக்கிறது. திருபருத்திக்குன்றம் த்ரைலோக்கிய நாதர் கோவில் பற்றி குருகு இதழில் எழுதியுள்ளேன். கோவில் மூடியிருந்தது. அங்கிருந்த தகவல் பலகையில் கோவில் தர்மகர்த்தாவின் மொபையில் எண் கொடுத்திருந்தனர். போனில் அழைத்தவுடன் உடனே ஆலய பூசகரை அனுப்பிவைப்பதாகச் சொன்னார். கோவில் முன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நான் காஞ்சியை மையமாக வைத்து ஒரு நாவல் எழுதுவது பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். காஞ்சிக்குச் செல்லும் போதெல்லாம் எழும் மனச்சித்திரம் அங்கிருந்த புத்த பிக்குகள், அருக படிவர்கள், சிற்பிகள், வெளிநாட்டுப் பயணிகள், கல்விக்கூடங்கள், வியாபார மையங்கள், சாலையில் செல்லும் அரசர்கள், குதிரைகள், தேர்களாக மனதில் எழுந்துவரும்.  

பூசகர்  சிறிது நேரத்திலேயே வந்துவிட்டார். நான் முன்னால் வந்த போது இருந்த அதே பூசகர் தான். சற்று வயது கூடியிருந்தது. சென்ற முறை வந்த போது அவரை  படம் எடுத்திருந்தேன். அதைக் காட்டிய போது மகிழ்ந்தார். ஆலயத்தையும் ஓவியங்களையும் பார்த்து விட்டு அருகிலுள்ள சந்திரபிரபர் ஆலயத்திற்குச் சென்றோம். அக்கோவில் கைலாசநாதர் கோவில், வைகுண்டநாத பெருமாள் கோவில்களின் அதே அமைப்பில் அமைந்த பல்லவ காலக் கற்கோவில். இரண்டாம் தலத்தில் வர்ணம் பூசிய சுதையாலான  சந்திரபிரபா தீர்த்தங்கரர் இரு சாமரதாரிகளுடன் இருந்தார். மேல்தளத்திலிருந்தவாறு சூரிய அஸ்தமனத்தை பார்த்து விட்டு தாமரையை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்னைக்கு கிளம்பினேன்.  

Previous Post Next Post
அனங்கன்