
நூறு வருடத்திற்கும் மேலான நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் அரசாங்கத்திடமிருந்தோ இந்திய இலக்கிய அமைப்புகளிலிருந்தோ உரிய நேரத்தில் உரிய விதத்தில் தமிழ் இலக்கியத்திற்கு அங்கீகாரமோ விருதோ கிடைத்ததில்லை. இந்த நிலை நவீன தமிழ் இலக்கியத்தின் முதல் முன்னோடியான புதுமைப்பித்தனின் காலம் முதலே இவ்வாறு தான் இருந்து வந்திருக்கிறது. இதற்கு நேர்மாறான கேளிக்கை, அரசியல் இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு எப்போதும் விருதுகளும் அங்கீகாரங்களும் கொடுத்து அவர்களை மகிழ்வித்திருக்கிறது நம் அரசு.
அதனால் நம்முடைய முன்னோடிகளான சி. சு. செல்லப்பாவோ, சுந்தர ராமசாமியோ, அசோகமித்திரனோ, கி. ராஜநாராயணணோ, நாஞ்சில் நாடனோ எழுதாமல் விட்டுவிடவில்லை. தமிழகத்தில் எப்போதுமே அறிவியக்கத்திற்கும் இலக்கியத்திற்கும் எதிரான மனநிலைதான் இருந்து வந்துள்ளது. இந்த எதிர் மனநிலைக்கு எதிராகத்தான் தங்களுடைய படைப்பு சக்தியை தங்கள் விசையாக கொண்டு நம் முன்னோடிகள் எழுதிவந்துள்ளனர். உரிய சமூக அங்கீகாரங்கள் இல்லாமலேயே நவீன தமிழ் இலக்கியத்தை அவர்கள் உலகத்தரத்தில் படைத்து வந்திருக்கின்றனர் இன்றுவரை.
இந்திய இலக்கிய விருதான சாகித்திய அகாதமி தமிழில் மிகவும் பிந்திதான் அசல் இலக்கிய எழுத்தாளர்களுக்கு விருதுகளை கொடுக்க ஆரம்பித்தது. அதற்கும் சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளர்கள் தங்கள் கண்டனங்களையும் அதிருப்தியையும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்ததால் கிடைக்க ஆரம்பித்தது.
இப்போது இந்திய அளவில் ஒரு முக்கிய இலக்கிய விருதாக கருதப்படும் ஞானபீடம் சினிமா பாடலாசிரியரான வைரமுத்துவிற்கு வழங்கபட்டுள்ளது தமிழகத்தில் தீவிர இலக்கியத்தில் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் வாசிப்பர்களுக்கும் அதில் இயங்கிக்கொண்டிருப்பவர்களுக்கும் பெரும் இழிவையும் வருத்தத்தையும் ஏற்படுத்திருக்கும் செயல்.
இந்த விருதை இதற்கு முன் பெற்றுள்ள பெரும் எழுத்தாளுமைகள் தாராசங்கர் பானர்ஜி, குவெம்பு, சிவராம காரந்த், ஜெயகாந்தன் போன்றோருக்கும் இலக்கியத்தை நேசிப்பவர்களுக்கும் ஞான பீட அமைப்பு பெரும் அவமானத்தை அளித்துள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை தமிழ் இலக்கியத்துக்கு விருது அளிக்கப்பட்ட எழுத்தாளர்களில் நிச்சயமாக அரசியல் செல்வாக்காலும் அரசியல் பரிந்துரைகளாலும் விருதுகள் பரிசுகள் பெற்றவர்களே அதிகம். உண்மையான முன்னோடிகள் அளவில் குறைவாகவே இருப்பார்கள்.
ஆனாலும் நவீன தமிழ் இலக்கிய சூழல், சிற்றிலக்கிய சூழல் இன்று நிறைய மாற்றங்களை கண்டுள்ளது. முதன்மையாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் போல் உலகளாவிய இலக்கிய அமைப்பு வேறு எந்த நாட்டிலாவது உள்ளதா என்று பார்க்கவேண்டும். இந்த வட்டத்தின் தொடர் செயல்பாட்டால் நவீன இலக்கியம் இப்போது நல்ல ஆரோக்கியமான வாசக பரப்பையே கொண்டுள்ளது. பத்து வருடத்திற்கும் மேலாக எந்த அரசு, தனியார் நிறுவனங்களின் துணையும் இல்லாமல் விருதுகளும் இலக்கிய கூடுகைகளும் இந்திய, உலக அளவில் நடத்திக்கொண்டிருக்கிறது. இப்போது வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டிருக்கும் ஞான பீட விருது நம்முடைய நேர்மையான இத்தனை வருட செயலுக்கான எதிர்வினையாகத்தான் தெரிகிறது.
இப்போது அமெரிக்காவில் நியூயார்க்கில் ‘வாழும் தமிழ்’ என்ற பெயரில் ஏப்ரல் 3,4 தேதிகளில் நவீன இலக்கியத்திற்காக மாநாடு நிகழ்ப்போகிறது. அமெரிக்க, லண்டன் இந்திய நண்பர்களால் பெரும் உழைப்பில் இந்த மாநாடு ஒருக்கிணைக்கப்படுகிறது. அந்நிகழ்வு தமிழை உலகின் முன் கொண்டு நிறுத்துவது மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக இங்கிருக்கும் அறிவு தரப்பை உலகின் முன் வெளிச்சமிட்டு காட்டும் நிகழ்வாக அமையும் பட்சத்தில் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு பெரும் தொடக்கமாக அமையும். அமைய வேண்டும். அதே நிகழ்வில் நவீன இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது ‘LIVING TAMIL AWARD FOR WORLD LITERATURE’. ஆண்டுதோறும் வழங்கப்படும் என எழுத்தாளர் ஜெயமோகன் அறிவித்துள்ளார்.
இதுவே நாம் செய்யவேண்டிய பொருத்தமான செயல். இவ்வாறான நேர்மறையான முன்னிறுத்தலாக இருக்க வேண்டுமே தவிர இந்த காக்கை கூட்டத்தின் முன் கைத்தட்டிக்கொண்டு அதை விரட்டுவதாக இருக்கக்கூடாது. இச்சூழலில் மேலும் நம்முடைய ஆற்றலைத் திரட்டி நவீன இலக்கியத்தை தமிழகத்தின் இந்தியாவின் உலகின் முன்னிறுத்துவோம். ‘ஞான பீடம்’ போன்ற விருதுகளின் பெருமானம் நூறு வருட தமிழ் இலக்கிய எழுத்தாளர்களின் விசைக்கும் ஆளுமைக்கும் விஸ்தரிப்புக்கு முன் ஒரு பொருட்டே அல்ல. நாம் இதை எளிதில் கடந்து மேலே சென்று உலகின் முன் உண்மையான தமிழ் இலக்கியத்தை கொண்டுசென்று சேர்ப்போம். இது சோர்விற்கான புலம்பலுக்கான காலம் அல்ல. தீவிரமான நேர்மறையான செயலுக்கான காலம். அமெரிக்காவில் நிகழவிருக்கும் தமிழ் இலக்கிய நிகழ்வு நல்லமுறையில் நிகழ்ந்து முடியவேண்டும். அதுவே தமிழ் இலக்கியத்திற்கான உண்மையான இடத்தை இந்திய, உலக அளவில் கொண்டு செல்வதற்கான பாதை.
Living Tamil Lit fest Web page