ஆன்ம சுகம்


(விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள தெய்வ தசகம் நூலுக்கு எழுதிய முன்னுரை)

குருகு இதழைத் துவங்கும்போதே நாராயண குருவின் தத்துவப் பள்ளியைச் சேர்ந்த எழுத்துக்கள் இதழில் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்று நினைத்திருந்தோம். இன்றைய நவீன உலகிற்கு நாராயண குரு அளவிற்குப் பொருந்தக்கூடிய ஞான ஆசிரியர்கள் வெகுசிலரே. ஆசிரியர் என்பவர் உடலுடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஒரு நிகழ்வு, தொடர்ந்து அடுத்தவர்களில் திகழ்ந்துகொண்டிருப்பவர். நாராயண குரு தான் நடராஜ குருவாக இருந்து குரு நித்ய சைதன்ய யதி ஆகிறார். இந்த ஞானத் தொடர்ச்சியை உயிரியல் பரிமாணம் அளவிற்குத்  தெளிவாகவே அறியமுடிகிறது. இன்று குரு நித்யாவின் இடத்தில் சுவாமி வியாச பிரசாத், சுவாமி முனிநாராயண பிரசாத் இருக்கிறார்கள்.

மதம் கடந்த இப்பத்து  இறைவணக்கப்பாடல்களை நாராயண குரு என்ற மகாகவியால் மட்டுமே இயற்றமுடியும். அதற்கு எம்மதங்களின் மேல் நிற்காமல் இருப்பதும், விருப்பும் வெறுப்பும் அற்றதுமான  தரிசனம் வேண்டும். குருவின் பாடல்கள் இறகு போல மிக எடையற்றவை.  இத்தனை நேரடியான எளிய பிரார்த்தனையை இயற்ற மனம் ஆகாயம் போலத் தெளிந்து விரிந்திருக்கவேண்டும். குரு இப்பாடல்களில் எந்த மத இறைவனின் பெயரையும் குறிப்பிட்டு துதிக்கவில்லை. காலையில் இயல்பாக வான் நோக்கி எழும் பறவையின் குரல் போல பிரபஞ்சத்தை நோக்கிப் பிரார்த்தித்துக்கொள்கிறார். எம்மதத்தைச் சேர்ந்தவர்களும் இப்பாடல்களைக்கொண்டு பிராத்திக்கலாம். மதங்களைச் சாராதவர்களும் கூட இப்பாடல்களைப் பாடலாம். எந்த இறைவனை நோக்கியும் பாடத்தக்கப் பாடல்கள் இவை. 

குரு இறைவனை ‘தெய்வம்’ என்ற சம்ஸ்க்ருதச் சொல்லில் குறிப்பிடுகிறார். அச்சொல்  நேர்ப்பொருள் தாண்டி மிக விரிந்த அர்த்தமுடையது. தெய்வம் என்றால் ஒளி என்று அர்த்தம், ஒளி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது. இருளும் ஒளியே, மிகக்குறைந்த ஒளி அவ்வளவு தான்.  நம்மில் ஒளியை நிறைக்கும் முயற்சியே இப்பாடல்கள். 

தெய்வ தசகத்திற்கு நாராயண குருவின் பள்ளியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து உரை எழுதிக்கொண்டிருக்கின்றனர். மேலும் பல உரைகள் எழுதப்படலாம். குரு நித்யா ‘ஓர் அத்வைதிக்கு பிரார்த்தனை தேவையா’ என்ற கேள்வியிலிருந்து ஆரம்பித்து பைபிள், குர்ஆன், விசிஷ்டாத்வைதம் வழியாகப் பிரார்த்தனை செய்பவனும் பிரார்த்திக்கப்படும் இறையும் எவ்வாறு ஒன்றானவர்கள் என்ற அத்வைத நிலைக்கே சென்று முடிகிறார்.   நித்யாவின் உரை இலக்கிய வாசிப்பு உள்ளவர்களுக்கு  இன்னும் அணுக்கமானதாக இருக்கலாம். ஏனெனில் நித்யா எப்போதும் எழுத்தாளராகவும் இருக்கிறார். 

குருகு இதழுக்காக நித்யாவின் எழுத்துக்களை மொழிபெயர்த்துத் தரமுடியுமா என்று ஆனந்த் ஶ்ரீனிவாசன் அவர்களிடம் கேட்டேன். அவர் நாராயண குரு இயற்றிய தெய்வ தசகத்திற்கு நித்யா உரை எழுதியிருக்கிறார் சிறிய நூல் தான் செய்துதருகிறேன் என்று சொன்னார். தெய்வ தசகம் குருகு முதல் இதழில் தொடராக ஆரம்பித்து பத்தாவது இதழில் முடிந்தது.  பக்க அளவில் நூல் சிறியது தான். ஆனால் அத்தனை சுலபம் அல்ல நித்யாவின் தரிசனங்கள் கலந்த செறிவான மொழியை அதன் எளிமையோடு மொழிபெயர்ப்பது. அவருக்கு எங்களது அன்பும் வணக்கங்களும். 

எழுத்தாளர் ஜெயமோகன் வழியாகத்தான் நாராயண குருவும், குரு நித்யாவும் எங்களுக்கு அறிமுகம் ஆகியது. அவர் நடத்திய சொல்புதிது இதழில் வந்த சில கட்டுரைகளை குருகுவில் மீண்டும் பிரசுரிப்பதற்காக அவ்விதழை வாசித்தேன்.  முதல் இதழிலிருந்து ஒவ்வொரு இதழிலும் நாராயண குரு பள்ளியைச் சேர்ந்த எழுத்துக்களை அவரே மொழிபெயர்த்தும் சக எழுத்தாளர்களை மொழிபெயர்க்க வைத்தும் வெளியிட்டிருந்தார். அவர் செய்த பணியை நாங்கள் குருகு இதழ் வழியாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தோம். அவரின் ஒவ்வொரு சொல்லிற்கும் நாங்கள் நன்றியும் வணக்கமும் செய்யவேண்டும் உடன் எங்கள் அன்பும்.

விஷ்ணுபுரம்  பதிப்பாளர் மீனாம்பிகை நித்ய சைதன்ய யதியிடம் பக்தியும் அன்பும் கொண்டவர். நித்யாவின் நூல்களை விஷ்ணுபுரம் பதிப்பகம் வழியாக வெளியிடுவதற்கு மிகுந்த மகிழ்வும் விருப்பமும் கொண்டிருந்தார். அவருக்கு நன்றி.

தெய்வ தசகம் மூலம் நான் என்ன அறிந்துகொண்டேன் என்று  சொல்லமுடியவில்லை. நம்மால் நாம் வளர்வதை அறியமுடியுமா? ஆனாலும் இவை என்னுள் இருந்து என்னை வளர்ப்பவை என்று மட்டும் தெரிகிறது. எத்தனையோ சொற்கள் நூலிலிருந்தும் வெளியிலிருந்தும் நம்மை வந்து அடைகிறது சில நம்மில் தங்கிவிடும் பல விலகிவிடும். இந்த நூலிலிருந்து நான் அவ்வாறு பெற்றது  ‘ஆன்ம சுகம்’ என்ற சொல். நித்யா ‘‘எல்லா மதங்களின் நோக்கமும் ஆன்ம சுகமே’’ என்கிறார்.  என் ஆன்மாவிலும் சுகம் நிலைப்பெறப் பிராத்திக்கிறேன்.

தெய்வ தசகம் நூல் வாங்க

 





Previous Post Next Post
அனங்கன்