‘சொல்லும் பொருளும்’ காளிதாசனுடைய சொல் அமைப்பு. எப்பொழுதும் சொல்லும், பொருளும் போல் இணைந்துள்ள உலகிற்கெல்லாம் தாய் தந்தையாகிய உமை, ஈசனை வணங்குகிறேன் என்று தன்னுடைய ரகுவம்ச மஹாகாவியத்தை ஆரம்பிக்கிறார். அந்தக் காவியத்தை என் சம்ஸ்கிருத ஆசிரியர் ரங்கநாத சர்மா அவர்கள் கற்பிக்கும் போது என் வாழ்வு சொல்லாலும் பொருளாலும் ஆனதாக மாறும் என்று நான் நினைத்திருக்கவில்லை. அது என் நல்வினை. வாழ்வின் இன்பங்கள் எதனினும் மேலான இன்பம் சொல் எனும் தெய்வத்தை வணங்கும் போது மட்டுமே ஏற்படுகிறது. பாரதி அதனால் தான் “வாணியைச் சரண் புகுந்தேன்” என்று சொல்கிறான் போலும். நான் நித்தமும் உபாசிக்கும் தெய்வமும் ‘சொல் மகள்’ தான். சொல் பெருக வாணியை சரண் அடைகிறேன் .