சில வருடம் முன் நானும் என் நண்பன் லக்ஷ்மி நாராயணனும் Tom Hanks நடித்த Forrest Gump திரைப் படத்தைப் பார்த்தோம். நான் பிறப்பதற்கு முந்தின வருடம் வெளியான திரைப்படம். முழுக்க முழுக்க அமெரிக்கத்தனமான படம் என்று தோன்றியது இருந்தாலும் எங்களுக்கும் டாம் ஹாங்க்ஸை பிடித்துப்போனது. படம் முழுக்க அவர் ஓடிக்கொண்டே இருப்பார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அது நல்ல கலைப்படமா என்பது பற்றி இல்லை. அவர் கதாபாத்திரத்தின் கல்லமின்மையும் அவன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். நாராயணன் சொன்னான் அவன் தன்னுடைய துக்கத்தை, தனிமையை ஓடியே கடந்து விடுகிறான் என்று.
சென்ற மாதம் ஒரு 15 நாள் பெங்களூரில் நாராயணன் வீட்டில் தங்கியிருந்தேன். முதல் நாள் மாலை நடை சென்று கொண்டிருந்தோம் அப்போது எதேர்ச்சியாக மைதானம் ஒன்றை பார்த்தோம் . நன்றாக பராமரிக்கப்பட்ட ஓர் ஓட்டப்பந்தய மைதானம். மக்கள் எங்கும் ஓடிக் கொண்டும் நடந்துகொண்டும் இருந்தார்கள். பொதுவாக இருவருமே நீண்ட நேரம் நடப்போம் . ஆனால் ஓடுவது அத்தனை சாத்தியமா என்று தெரியவில்லை. ஓடித்தான் பார்ப்போமே என்று முதல் சுற்று ஓடிப் பார்த்தேன். முடிந்தது. நாளையிலிருந்து இங்கே ஓடுவது என்று முடிவு செய்து கொண்டோம். எனக்கு மறுநாளே ஷூ ஒன்றை ஆர்டர் செய்தேன். ஆனால் ஓடுவது அத்தனை சுலபமாக இல்லை. நடப்பதை விட அதிக ஆற்றல் அதற்கு தேவை. இங்கு இருக்கும் பதினைந்து நாட்களுக்குள் பத்து சுற்றை ஒரே மூச்சில் முடிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஒரு நாளைக்கு ஒவ்வொரு சுற்றாக அதிகரித்து ஒரு வாரத்திலேயே பதினொன்று சுற்று ஓடிவிட்டேன். இங்கே சென்னை வந்ததும் ஒரு மாரத்தான் போட்டியில் இன்று கலந்துகொண்டு ஐந்து கிலோ மீட்டர் பந்தயத்தை 45 நிமிடத்தில் முடித்தேன்.
கடந்த மூன்று மாதங்களாக எதுவும் வாசிக்கவில்லை, எழுதவில்லை. மனம் சிறிய வடத்தில் சுற்றி ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு வித மன அலைச்சல். எதனால்? ஏன்? என்ன காரணம் என்று இப்போதும் புரியவில்லை. வாழ்க்கையில் மற்ற விஷயங்கள் எல்லாம் புரிந்துவிட்டதா என்ன? இந்த ஓட்டம் சிறு மகிழ்ச்சியை இடைவெளியை நிறைவை அளித்தது.
சிறு வயதிலிருந்தே எனக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டு. பாடசாலையில் விடுமுறை நாட்களை முழுவதும் காலையிலிருந்து சாயம் வரை விளையாடியே கழித்திருக்கிறேன். இப்போது ஓட ஆரம்பித்தவுடன் ஒரு நண்பர் இப்போது எதற்கு ஓட்டம்? அதனால் என்ன பயன் என்று கேட்டார் . நான் அவருக்கு பதில் சொல்லவில்லை. சொன்னாலும் அவருக்குப் புரியும் என்று தோன்றவில்லை. ‘தான்’ என்று எப்போதும் விழித்திருக்கும் 'பிரக்ஞை' இல்லாமல் இருப்பதன் மகிழ்ச்சியை சொல்லி புரியவைக்க முடியுமா என்ன?
